Wednesday, July 28, 2010

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை கோரி


மதசார்பற்ற அரசு மத சார்பற்ற அரசியல் மதசார்பற்ற நாடு என்று நமது அரசியல் வாதிகளால் மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்கொண்டிருக்கின்ற இந்நாட்டில் சச்சார் கமிட்டி பரிந்துரையின் பேரில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மாணவர் மாணவியர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதல் வகுப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி வரை பல ஆயிரக்கணக்கில் நிதிஉதவி செய்யப்படுகிறது.

ஆனால் ஹிந்து மாணவர்களுக்கு எதுவும் கிடையாது. நாட்டில் பெரும்பான்மை இனத்தவருக்கு ஒன்றும் கிடையாது. சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்று பிரதமரே சொல்கிறார். இந்நிலையில் ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி நிதி வழங்கிடவேண்டும் என்று பா ஜ க போராடி வருகிறது. கடந்த 20௦ நாட்களாக தமிழகம் எங்கும் மாவட்ட வாரியாக பா ஜ க ஆர்பாட்டம் செய்து வருகிறது. ஆர்பாட்டம் நடைபெற்ற மாவட்டங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் மாணவர்கள் பெண்கள் என் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 25 ஆம் தேதியன்றும் கன்யாகுமரி மாவட்ட ஆர்பாட்டம் நாகர்கோவிலில் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. சுமார் ஒரு லக்ஷம் பேர் பங்கு கொண்ட இந்த பிரம்மாண்டமான ஆர்பாட்டத்தினைப் பற்றி நமது ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. எதோ பெயரளவிற்கு ஒரு மூலையில் சிறிய செய்தியை பிரசுரம் செய்தும் தொலைக் காட்சிகளில் சில வினாடிகள் மட்டும் ஒளிபரப்பப்பட்டது.

Tuesday, July 13, 2010

தி கராத்தே கிட் (The Karate Kid) - திரை விமர்சனம்


1984 -ல் வெளியாகி பெருவெற்றியடைந்த ' தி கராத்தே கிட்' திரைப் படத்தின் புத்தாக்கம்தான் இந்த 2010-ன் ' தி கராத்தே கிட்' . கலிபோர்னியாவில் இருந்து சீனாவுக்கு கதைக் களம் மாறியிருக்கிறது. பழைய நடிகர்களுக்கு மாற்றாக, புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்- ஆகவும், ஜாக்கி சான் கராத்தே ஆசானாகவும் நடித்துள்ளனர்


டெட்ராயிட் நகரத்தின் மோட்டார் வாகன தொழிலின் தோல்வியில் கதை தொடங்குகிறது. தந்தையை இழந்த இளஞ்சிறுவன் 'ட்ரே பார்க்கரி'ன் ( Dre Parker) தாயார் மோட்டார் வாகன தொழிலின் முடக்கத்தில் வேலையை இழக்கிறார். மோட்டார் வாகன வேலை வாய்ப்புக்கள் சீனாவுக்கு இடம்பெயர, பிழைப்புக்காக மகனுடன் பெய்ஜிங்கில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். முற்றிலும் அமெரிக்க பழக்க வழக்ககங்கொண்ட சிறுவன் ட்ரே பார்க்கர் பெய்ஜிங் சூழலில், மஞ்சள் கலாச்சாரத்தில் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் திரைக்கதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க கதை தொடங்குகிறது.


ட்ரே வீதியில் விளையாடச் செல்லும்போது, வயலின் பயிற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு சீனச் சிறுமியைச் சந்தித்துப் பேசுகிறான். ட்ரேவின் கேசத்தில் செய்யப்பட்டிருக்கும் ஆப்பிரிக்க மணப்பின்னல் அலங்காரத்தை அவள் ஆர்வத்துடன் தொட்டுப் பார்க்கிறாள். இது அவள் மேல் பற்று கொண்டிருக்கும், தெருவின் ரவுடிப்பையன் 'செங்'கிற்கு ஆத்திரமூட்ட, செங் ட்ரேவைக் நையப் புடைக்கிறான். அத்தோடு நில்லாமல் பள்ளியிலும் செங்கின் அடாவடிகள் தொடர பரிதவித்துப் போகிறான் ட்ரே. பெய்ஜிங்கின் மிகப்பெரிய குங்ஃபு பள்ளியில் செங் பயிற்சி பெறுவதை அறிந்து கொள்கிறான் ட்ரே. அதிர்ஷ்டவசமாக, ட்ரே தங்கியிருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்பின் மராமத்துப் பணியாளராக இருக்கும் திருவாளர் ஹான் (ஜாக்கி சான்), ட்ரேவுக்குக் குங்ஃபு கற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார். செங் கற்றுக்கொள்ளும் குங் ஃபு பள்ளியின் மாஸ்டரும், திரு. ஹானும் , சீன சிறுவர் குங்ஃபு சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்கள் இருவரும் மோதுவார்கள் எனவும் அதுவரை ட்ரேவுக்கு மற்ற சிறுவர்கள் எந்த தொந்திரவும் தரலாகாது எனவும் ஒப்புக்கொள்கின்றனர்.(1984 ம் வருடத்திய கராத்தே கிட்டிலும் இது உண்டு.) ஹானின் கடுமையான பயிற்சியின் விளைவாக திறம்பெறும் ட்ரே, சீன குங்ஃபு சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் செங்கை சந்திப்பது கதையை முடிவுக்கு இட்டுச் செல்கிறது.


இந்தப் படத்தின் பலமாக அமைவது பெய்ஜிங்கின் தொழில் வளர்ச்சி, சீனப் பெருஞ்சுவரின் கம்பீரம், பசுமை மிகுந்த மலைகள் ஆகியவற்றைக் காண்பிக்கும் காமெரா படத்தொகுப்பு. குறிப்பாக, குங்ஃபு பயிற்சிக்கு எழில் மிகுந்த மிக நேர்த்தியான இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு செல்லும் இரயில் பயணக் காட்சிகள், மலைக்கோட்டையின் பழங்காலக் கட்டிட அமைப்பு, பிரம்மாண்டம் ஆகியவற்றை ஒரு சுற்றுலா போலக் காண்பித்திருப்பது கொடுத்த பணத்துக்கு இதமாக இருக்கிறது. கடைசி நாள் குங்ஃபு பயிற்சியை நிழல் ரூபத்தில் காண்பிப்பதும் அருமை. படத்தின் மற்ற இரண்டு பலங்கள் ஜாக்கி சானும், நகைச்சுவையும். ஐம்பத்தாறு வயதாகும் ஜாக்கி சான் திரைப் படத்தில் வரும் காட்சிகள் சற்று குறைவென்றாலும் அவருக்கே உரிய வேகமும், வாடிக்கையான ஹாஸ்யமும் சேர்த்து அசத்துகிறார். படம் நெடுக அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்தை தொய்வில்லாமல் தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றன.


ஆனால் முதிர்ச்சியுள்ள ரசிகர்கள் படத்தில் வரும் ஓட்டைகளை எளிதாகக் காணலாம். சாதாரண ரசிகர்களுக்கு, படத்தில் உள்ள குங்ஃபு பயிற்சிக் காட்சிகளில் நல்ல ஆழமும், கடுமையும் த்ரில்லிங்காக அமையும் என்றாலும் உண்மையான குங்ஃபு அல்லது கராத்தே டெக்னிக் என்பது ஒரு மருந்துக்குக் கூட கிடையாது. சாம்பியன்ஷிப் போட்டியிலோ சண்டையை விட வெகு வேகமாகக் கேமரா சுழன்று தலைகளையே திரும்பத் திரும்பக் காட்டுகிறது. என்ட்டர் தி டிராகன் , தி ப்ளெட் ஸ்போர்ட் படங்களில் வந்த அதே மாதிரி போட்டி என்றாலும் சண்டையின் ஆழம் ஒரு 10% கூட கிடையாது. இறுதிப் போட்டியின் கடைசிச் சுற்று எதிர்பாராத விதமாக வெறும் அரை நொடியில் முடிகிறது. இதெல்லாம், தற்காப்புக்கலை ஆர்வத்துடன் படம்பார்க்கச் செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுக்கும். ட்ரே பார்க்கராக நடிக்கும் ஜேடன் ஸ்மித்துக்கு, வில் ஸ்மித் போன்று நடிப்போ சண்டையோ எடுபட இன்னும் சில வருடம் பிடிக்கும். இவ்வளவு ஏன், தலைப் பின்னலும், தளிர் முகமும் கொண்டு 'சிறுமியோ?' என சில சமயம் எண்ண வைக்கும் அளவுக்கு பாத்திரத்துக்கு பொருத்தமில்லாத உருவம். இந்நிலையில் ட்ரேவின் காதலும், சீனக் காதலியின் அரை நிமிட தப்பாட்டமும் அமெரிக்காவில் மட்டுமே ஆரவாரத்துடன் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. செங்கின் வன்மத்துக்கும் போதுமான காரணம் இல்லை.


மொத்தத்தில் அப்பட்டமான குறைகளுடன் அமைந்த ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்


படம் முடிகையில் அமெரிக்க ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செயதது(அமெரிக்க சிறுவன் சீனாவில் ஜெயித்துவிட்டானாம்), அவர்கள் இன்னும் அமெரிக்க வீண் பெருமையில், கற்பனையில் லயித்து இருக்கிறார்கள் என்பதையே காட்டியது. பத்திரிகைகள் இப்படத்தைப் பாராட்டியும், குறிப்பாக ஜேடன் ஸ்மித்தின் காதல், சண்டை, நடிப்புத் திறமைகளைப் புகழ்ந்து எழுதி இருப்பதும் இவர்கள் , 'politically correct' ஆக இருக்க விரும்புவதையே காட்டுகிறது.