Wednesday, August 20, 2014

ரதாங்கபாணி ரக்ஷோப்ய ; சர்வப் பிரஹரன ஆயுதஹ ;


பீஷ்மர் பகவானை ஆயிரம் பெயர்களால் வணங்கியதே பிற்காலத்தில் விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரம் எனப் பெயர்பெற்றது. பீஷ்மர் விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும் நன்குணர்ந்தவர். கிருஷ்ணனை குழந்தையில் இருந்து கண்டு ரசிக்கும் பெரும்பேறு பெற்றவர். அவர் அப்போதுதான் சிலநாட்கள் முன்பு, தானே நேரடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை குறிப்பிட்டு பஹவானை துதிக்கிறார்:

ரதாங்கபாணி ரக்ஷோப்ய ; சர்வப் பிரஹரண ஆயுதஹ ;

இதன் பின்புலம் என்ன?

குருட்ஷேத்திரத்தில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஓர் இரவு. துரியோதனன் பீஷ்மாச்சார்யரிடம் வந்து நிர்பந்தித்துப் பேசுகிறான். "பிதாமகரே, பீமனும், அர்ஜுனனும் நம் படையை துவம்சம் செய்கிறார்கள். பல யானைகளை, தேர்களை முடக்கிவிட்டார்கள். கிருஷ்ணனோ ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று வாக்களித்து இருந்தாலும், தன்னுடைய சூழ்ச்சியால் அவர்களுக்கு பக்க பலமாக திகழ்கிறார். நீங்களோ அவர்கள் மேல் கொண்ட அன்பால், உக்கிரமில்லாமல் சண்டையிடுகிறீர்கள். நீங்கள் நாளைக்காவது அர்ஜுனனை நேரடியாக சந்தித்துத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்கிறான். ராஜதுரோகம் செய்ல் ர்மாகாது என்பதால் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார் பீஷ்மர்.

துரியோதனன் கூடாரத்தைவிட்டு வெளியேறியவுடன், முக்காடிட்ட குனிந்த  தலையுடன் ஒரு பெண் பீஷ்மரை நமஸ்கரிக்கிறாள். "தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசிர்வத்திக்கிறார் பெருமகன் பீஷ்மர். முக்காடு விலக்கி தலைநிமிர்ந்தால் தெரிகிறது அர்ஜுனன் மனைவி சுபத்திரையின் மேகம் விலகிய  நிலவு போன்ற முகம்.  "பிதாமகரே, உங்கள் வாயால் என்னை தீர்க்க சுமங்கலியாக இருக்கும்படி வாழ்த்தினீர்கள். ஆகவே என் கணவனை நீங்கள் போரில் கொல்லக் கூடாது" என்று  காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு  முகம் நீரிருக்கும் நிலவாக ஆகும்படி  அழுகிறாள். எதிர்பாராத இந்த நிகழ்வால் ஆச்சரியம் அடைந்த பிதாமகர், கூடாரத்துக்கு வெளியே ஓடிவந்து பார்க்கிறார். ஓரத்தில் கிருஷ்ண பகவானோ ஒளிந்துகொண்டு இருக்கிறார். "கிருஷ்ணா இதுவும் உன் விளையாட்டு தானா? என் வாக்கை மீறி நான் அர்ஜுனனை கொல்ல முடியாது என்ற நிலையைக் கொண்டுவந்த உன்னை, நீ துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கை மீறி ஆயுதமேந்த வைக்கிறேன் பார்" என்று சபதமெடுக்கிறார் பீஷ்மர். 


அடுத்தநாள் போரில், வாக்குக் கொடுத்ததால் அர்ஜுனனை கொல்லத்தான் முடியாது, ஆனால் நிராயுதபாணியாக்கி கைது செய்திட முடியுமே என்று அர்ஜுனனுடன் போர் செய்கிறார் பீஷ்மர். அர்ஜுனன் மேல் அம்பு எய்யாமல், ஆனால் அவனின் வில்லை குறிவைத்து அம்பெய்கிறார். அர்ஜுனன் பல விற்களுக்கு பலப்பிரயோகம் செய்து நாணேற்ற, நாணேற்ற ஒவ்வொன்றையும் உடைத்தெறிகின்றன பீஷ்மரின் அம்புகள். தொடர்ந்த தாக்குதலால் களைத்துப் போன அர்ஜுனன் மூர்ச்சையாகி சரிகிறான். தன் நண்பனும் பக்தனுமாகிய அர்ஜுனன், தன் கண் முன்னால் சரிந்து விழுவதைப் பார்த்து பதைபதைத்து  கோபம் பொங்கிய கிருஷ்ணர், தேரில் இருந்து குதிக்கிறார். பீமனின் கதையில் அடிபட்டு நொறுங்கியிருந்த ஒரு தேரின் சக்கரத்தை கையிலெடுத்து பீஷ்மரை அடிக்க செல்கிறார். பீஷ்மரோ, "ஆஹா பஹவான் கையால் மோக்ஷமா? என்ன புண்யம் செய்தேன்" என்று, வில்லம்புகளை உதறி நிற்கிறார் (கைகூப்பினால் கிருஷ்ணன் கொல்ல மாட்டானே) . மயக்கம் தெளிந்த அர்ஜுனன், "கிருஷ்ணா, ஆயுதமேந்தமாட்டாய் என சத்தியம் செய்துள்ளாய், சத்தியத்தை மீறி பிதாமகரைக் கொல்லாதே" என பகவானின் காலைப் பிடித்துக் கொள்கிறான். பகவானும் திரும்புகிறார்; பீஷ்மரின் சபதமும் நிறைவேறியது.

ரதாங்கம்  = ரதம் + அங்கம் = தேர் + பகுதி .  தேரின் பகுதியான சக்கரத்தை கையிலெடுத்து, ஆபத்தில் இருக்கும் பக்தனை ரக்ஷித்ததை கண்ணெதிரில் கண்ட  பீஷ்மர்,  மகாவிஷ்ணுவை ரதாங்கபாணி ரக்ஷோப்ய என்று துதிக்கிறார். 

வராக அவதாரத்தில் கொம்பு போல் வளர்ந்திருக்கும் பல்லை ஆயுதமாய்  பயன்படுத்தி பூமாதேவியை மீட்டவன். கூர்மாவதாரத்தில் ஆமையாக ஓட்டையும், தேவர்களுக்கு மட்டுமே அமிர்தம் கொடுக்க மோகினியாய் வந்து அழகையும் ஆயுதமாய் பயன்படுத்தியவன். நரசிம்ஹ அவதாரத்தில் நகத்தையே  ஆயுதமாக்கி பிரஹலாதனை ரட்சிக்க வந்தவன். வாமன அவதாரத்தில் தர்ப்பை புல்லை கமண்டலத்தில் நுழைத்து ஆயுதமாய் பயன்படுத்திய வல்லவன். . இராமாவதாரத்தில் வில்லையும், பலராமனாய் ஏரையும் , பரசுராமனாய் கோடாரியையும், கிருஷ்ணனாய் சக்கரத்தையும் ஆயுதமாய்ப் பயன்படுத்த தெரிந்தவன். சர்வத்தையும் ஆயுதாமாய்ப் பயன்படுத்த தெரிந்த அவனையல்லாமல் வேறு யாரை "சர்வப் பிரஹரன ஆயுதஹ " என்று துதிக்க முடியும்?

பக்தனுக்கு ஆபத்து என்றால், நாள் நேரம் பார்க்க மாட்டார்.. கொடுத்த சத்தியத்தைக்கூட விட்டுவிட்டு காப்பாற்ற வருவார் பகவான் கிருஷ்ணர்.  அவர் பிறந்த கோகுலாஷ்டமி இன்று தாமரை மொட்டுப் போன்ற அவர் பாதங்களை வணங்குவோம்.

 ரதாங்கபாணி ரக்ஷோப்ய ; சர்வப் பிரஹரன ஆயுதஹ ;

-- கார்கில் ஜெய்.

3 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி விவேக்.
      எப்படி என் பிளாக் பற்றி அறிந்தீர்கள்?

      Delete
    2. மிக்க நன்றி விவேக்.
      எப்படி என் பிளாக் பற்றி அறிந்தீர்கள்?

      Delete