Saturday, November 28, 2009

வெங்காயம்

நமஸ்காரம். உபய குசலோபரி. மஹாகணம் பொருந்திய
தேவரீர் சௌக்யமா ? இங்கே ந்யு ஜெர்சீயில் எல்லாரும் க்ஷேமம்.

இந்த லிகிதத்தின் தாத்பர்யம் என்னவென்றால்,
அதாகப்பட்டது என் பால்ய ஸ்நேகிதன் ஸ்ரீமான் நாமக்கட்டி நரஸிம்ஹ பட்டாத்ரி ஜாகைக்கு, அடியேன் விஜயம் பண்ணியிருந்த சமயத்திலே நடந்த சம்பவத்தை தேவரீரிடம் பரிவர்த்தனை பண்ண வேண்டும் என்பதுதான்.

விவாஹத்திற்கு முன்னால் ஓக் ட்ரீரோடு அல்ஹசாரி ஹோடேலில் தினமும்,
வாயிலே ஜலப் பிரவாஹமெடுக்க பரோட்டா சாப்பிடுவதை சந்த்யா வந்தனத்துக்கு நிஹராக அனுசரித்தவன் இந்த நரஸிம்ஹ பட்டாத்ரி. அவன் விவாஹமான காலத்திலிருந்து திடீரென்று 'பூண்டு, வெங்காயம்' ரெண்டும் அபச்சாரம் என்று விட்டு விட்டதனாலே, அதைப் பற்றி முதலில் எழுதிவிட்டுத்தான் இடுப்பிலேர்ந்து அங்கவஸ்திரம் அவிழ்ந்தாலும் கட்டுவேன் என சங்கல்பம். போன சஷ்டியன்று அநேக நடையாக கேம்ரி காரை ஒட்டிக்கொண்டு பமோனா ரங்கநாதர் கோவில், பிரின்ஸ்டன் துர்கா கோவில், மோர்கன்வில் குருவாயூரப்பன் கோவில், பிரிட்ஜ்வாட்டர் பாலாஜி கோவில், பிளஷிங் பிள்ளையார் கோவில் என்று ஷேத்ராடானம் பண்ணி திரும்பிக் கொண்டிருந்தேன். கிரகத்துக்கு போய் தளிகை பண்ணி போஜனம் ஆரம்பிக்க நாழியாகும் என்பதனாலே ஒரு நடை நரஸிம்ஹ பட்டாத்ரி ஜாகைக்குப் போய் பிரசாதம் கொடுத்துவிட்டு அங்கேயே சிரம பரிகாரம் பண்ணிவிடலாம் என்று முடிவு பண்ணினேன். அங்கே அவன் பார்யாள் எனக்கு கூஜா நிறைய திருக்கண்ணமுதும், சம்படத்தில் உளுந்து வடையும் கொடுத்து உள்ளே போனவுடன், "வடைல வெங்காயம் இருந்தால் நன்னா இருக்குமே" என்றேன். அவன் பதறிப்போய் என்னை ஆலிங்கனம் பண்ணி தாழ்வாரத்துக்கு தர தரவென்று இழுத்துண்டு போய், நரசிம்ஹமூர்த்தி ஹிரண்யகசிபுவை வதம் பண்ணின மாதிரி வாசக்காலில் நிக்கவைத்து ரஹஸ்யமாக, "வெங்காயம், பூண்டெல்லாம் அறவே விட்டுட்டேன்" என்று பீதியோடு சொன்னான். அவனை ஆசுவாசப் படுத்தி திரும்ப அஹத்துலே அழைச்சிண்டு போய், "ஏண்டா, நீயோ துணில கெட்டவன் வச்ச ஹோடெல்ல தின்னு கெட்டவன்கறதுக்கு ஏத்தமாதிரி திதி பாக்காம சாப்பிடறவன்.. உனக்கென்னடா திடீர்னு?", ன்னு விசாரித்தத்திலே அகப்பட்ட சுவாரஸ்யமான விஷயம் இதுதான் :

அவன் போன சதுர்த்தியன்று வாங்கி வந்திருந்த வெங்காய பஜ்ஜியை, மோகத்துடன், அவன் ஆம்படையாள் வாயிலே ஊட்ட பிரயத்தனம் பண்ண, மகாலக்ஷ்மி மாதிரி இருந்த அவள், க்ஷணத்திலே பத்ரகாளியாகி அவன் குமட்டில் குத்தி, "என் தோப்பனார் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்னிஹோத்ரம் விஜய வேங்கட சேஷாத்ரி கனபாடிகள் மருமகன் வாயில் இனிமே 'அது' வரவேப்படாது" என்று சொல்லிவிட்டாளாம். அதனால் நாமக்கட்டி நரஸிம்ஹ பட்டாத்ரி
பந்துக்கள் எல்லாரிடத்திலும் , "பஞ்சமி திதியிலேர்ந்து, ஆத்துல சாளகிராமம் இருக்கறதாலே நான் 'அதை' விட்டுட்டேன்" என்று சொல்லிவிட்டதாகச் சொன்னான். நான் "என்னது சாலிக்கிராமம் உங்க ஆத்துல இருக்கா? வட பழனி பக்கத்திலே தானேடா இருக்கு"-ன்னேன். அதற்கு அவன் "டேய் அசமஞ்சம், ..சாலிகிராமம் இருக்குன்னா சொன்னேன்? 'சாளக்கிராமம் இருக்கறதுனாலே'-னுதானே சொன்னேன்..ஸ்மார்த்தன் அப்பிடில்லாம் பேசறது மகா பாபம் " என்று ப்ரசங்கம் பண்ணினான். . லேசான குழப்பத்திலே "சாளகிராமம்-கிறது யார்? உன் மாமியாரா?" என்று அடியேன் விகல்பம் இல்லாமல் கேட்டேன். அப்படிக் கேட்டது ஒன்றும் உங்களிடம் ப்ரஸ்தாபிக்க வேண்டிய விஷயமில்லைதான்; ஆனால் ஜனன காலந்தொட்டு என் வாக்கு ஸ்தானத்துலே ராஹு பகவான் ஸ்திரமா எழுந்தருளி இருக்கறதுனாலே அதற்கப்பறமும் விடாமல், கவுண்டி புஸ்தகாலயத்துக்குப் போய், ரொம்பவே ப்ரயத்தனம் பண்ணி தேடிக்கண்டுபிடித்து, அவனிடம் இந்த வெங்காயத்தின் குறுக்கு நெடுக்கு வெட்டு நிழற்படத்தை ஔஷதப் புஸ்தகத்தில் இருந்து எடுத்துக் காட்டினேன்; " 'அதை' எப்படி நறுக்கி தீட்சண்யம் உபண்ணினாலும் சாட்சாத் எம்பெருமாள் சங்கு சக்கரம் போல திவ்யமா இருக்கே" என்று சொல்லி படத்தைப் ப்ரோஷித்துப் நமஸ்காரம் பண்ணி அவனைப் பரிகாசம் பண்ணினேன் . இவ்வாறாக அவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டதிலே ரசாபாசமாகி என்னுடன் சம்பாஷனையையே அடியோடு நிறுத்தி இப்போ திருவாதிரை வந்தால் மாசம் நாலாகிறது . அது எப்படியோ போகட்டும், வெங்காயம் பற்றிய அடியேன் அபிப்ராயம் சரியா என இந்த படத்தை நீங்களே பார்த்து முடிவுக்கு வரணுமாய் பிரியப் படுகிறேன்:

வெங்காயம் பற்றி தேவரீர் தெரிந்தது எல்லாவற்றையும் கமெண்ட் செக்ஷன்இல் எழுதவும்;

வாசக தோஷம் க்ஷந்தவ்யக.

5 comments:

 1. அந்த சக்கர வெங்காயத்தை பார்த்தால் அந்த கால பிளாஷ்பேக் கொசுவர்த்தி மாதிரி இருக்கே.

  எனக்கு தெரிந்து பூண்டு வெங்காயம் இரண்டுமே 'Negative Pranic' என்று சொல்லப்படும் உணவு வகை.
  இதற்கு மருத்துவ குணம் கொண்ட உணவுகள் என்றாலும் அதை தினமும் உண்பதால் நமது concentration level
  குறைய வாய்ப்புள்ளது. பாம்பின் விஷம் மருத்துவ குணம் கொண்டது, ஆனால் அதை தினமும் உண்ண முடியாது.

  இதை பரிட்சித்து பார்க்க, கையில் ஒரு ருத்ராக்ஷ மாலை இருந்தால், நல்ல ருத்ராக்ஷ மாலை இருந்தால்.
  அதை பூண்டு மற்றும் வெங்காயத்தின் மேல் பிடித்தீர்களானால் அது anti-clockwise-இல் சுற்றும்.
  அதே காரட், வெண்டைக்காய் போன்ற காய்களின் மேல் பிடித்தீர்களானால் அது clockwise-இல் சுற்றும்.
  இதே போல் உருளையும், தக்காளியும் neutral pranic என்பார்கள், ருத்ராக்ஷ மாலை வெறுமனே ஆடிகொண்டிருக்கும், சுற்றாது.

  இதை கருத்தில் கொண்டுதான் நம்ம பெரியவா பூண்டு வெங்காயத்தை அறவே ignore பண்ணிருக்கா...புரிஞ்சுதோல்யோ!!!

  ReplyDelete
 2. உண்மையில் ருத்திரக்ஷத்தை வைத்து சுற்றினால் வெங்காயம், பூண்டு இவற்றிலிருந்து பூசணிக்கு, கேரட், வெண்டை ஏதும் மாறுபடாது. இதெல்லாம் இஷா யோகாவில் வருபவர்களை பணிய வைத்து ஹிந்து மதத்தில் இருந்து விலகிச்செல்ல வைக்கும் முயற்சிகள் - என்பது என் பணிவான அபிப்ராயம்.. அவ்வளவுதான். சிகாகோவில் சந்திக்கும்போது ருத்திரக்ஷத்தை சுற்றிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால் அவை இந்திர்யங்களை தூண்டக் கூடியவை என்று பல இடங்களில் வேதக் குறிப்புகள் உள்ளன.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. am not only confused by your comments but i heard already abt my friends that Isha Yoga is not so good.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete